அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
அல்லாஹ் மறுமைநாளில் கூறுவான்:
""ஆதத்தின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். நீ என்னை நலம் விசாரிக்க வரவில்லை,''.
அதற்கு மனிதன் ""என் அதிபதியே! நான் எப்படி உன்னை நலம் விசாரிக்க முடியும்?
நீ அகிலங்களுக்கெல்லாம் அதிபதியாயிற்றே!'' என்று கேட்பான்.
அதற்கு இறைவன், ""என்னுடைய இன்ன அடியார் நோயுற்றுக் கிடந்தார். நீ அவரை நலம் விசாரிக்கவில்லை; நீ அவரை நலம் விசாரிக்கச் சென்றிருந்தால், அதன் மூலம் என்னை அடைந்திருப்பாய் என்று நீ அறிந்திருக்கவில்லையா?'' என்று கூறுவான். (முஸ்லிம்)
விளக்கம்: நலம் விசாரித்தல் என்பது ஒரு நோயாளியிடம் சென்று நலம் விசாரிப்பது மட்டுமன்று. மாறாக, அவர் ஏழையாயின், அவருக்குத் தேவையான சிகிச்சைக்கும் மருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்; அவர் ஏழையல்லர்; ஆனால், மருந்து கொண்டுவரவும் அதனைக் குடிக்கச் செய்யவும் ஒருவரும் அவருக்கில்லை என்றால், அந்தப் பணிவிடைகளை அவருக்குச் செய்வதில் கவனம் செலுத்திட வேண்டும். இவைதாம் உண்மையான நலம் விசாரித்தலாகும்.
அறிவிப்பாளர்:
அபூமூஸா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""நோயாளிகளை நலம் விசாரியுங்கள்;
பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; கைதியை
விடுதலை செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.''
(புகாரி)
அறிவிப்பாளர்: அனஸ்(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு யூதச் சிறுவன் பணிவிடை புரிந்து கொண்டிருந்தான். அவன் நோயுற்றவுடன் அண்ணலார் அவனை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவனது தலைமாட்டில் அமர்ந்து ""நீ இஸ்லாத்தைத் தழுவிவிடு!'' என்று அவனிடம் கூறினார்கள். அச்சிறுவன் தன் தந்தையைப் பார்த்தான். அவர், ""நீ அபுல்காஸிம் (அண்ணலார்) சொல்வதைச் செய்!'' என்று கூறினார். எனவே, அவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டான். அதன் பிறகு அண்ணலார், ""அச்சிறுவனை நரகத்திலிருந்து காபாற்றிவிட்ட அல்லாஹ்விற்கு நன்றி, '' என்று கூறிய வண்ணம் அங்கிருந்து கிளம்பினார்கள்.
(புகாரி)
விளக்கம்: அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய நடத்தையை நண்பர், பகைவர் அனைவரும் அறிந்திருந்தனர். யூதர்கள் அனைவருமே அண்ணலாரின் பகைவர்களாய் இருக்கவில்லை. இந்த யூதருக்கு அண்ணலாருடன் தனிப்பட்ட முறையில் தொடர்பிருந்தது. எனவே, அவர் தன் மகனை அண்ணலார்(ஸல்) அவர்களின்
பணிவிடைக்காக அனுப்பிவிட்டிருந்தார்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்(ரலி)
""நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லும் போது, கூச்சல் போடாமலிருப்பதும் நோயாளியின் அருகே சிறிதுநேரமே உட்காருவதும் அண்ணலாரின் நடைமுறை(ஸுன்னத்) ஆகும்.''
(மிஷ்காத்)
விளக்கம்: இந்த அறிவுரை பொதுவான நோயாளிகளுக்குரியதாகும். ஆனால், ஒருவரின் நெருங்கிய நண்பர் நோய்வாய்ப்பட்டுவிட்டால், தான் அவரருகே அமர்ந்திருப்பதை விரும்புகின்றார் என்று அந்நண்பர் உணர்வாராயின் அவர் அதிக நேரமும் அமர்ந்திருக்கலாம்.
அறிவிப்பாளர்:
அபூஹுரைரா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்:
""ஓர் இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளனுக்கு கண்ணாடியாவான். ஓர் இறைநம்பிக்கையாளன் மற்றோர் இறைநம்பிக்கையாளனின் சகோதரன் ஆவான். அவன் தன் சகோதரனை அழிவிலிருந்து காப்பாற்றுகிறான்; அவனுக்குப் பின்னாலிருந்து அவனைப் பாதுகாக்கின்றான்.'' (முஸ்லிம்)
விளக்கம்: ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு கண்ணாடியாவான் என்பதன் கருத்து: அவனுக்கு நேரும் துன்பத்தை தனக்கு நேர்ந்து விட்ட துன்பமாகக் கருதுவான்; எப்படி அவன் தன் துன்பத்தால் துடிக்கிறானோ அதுபோன்று இவனும் துடித்தெழ வேண்டும்; அதனை நீக்கிட முயலவேண்டும்.
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே... நூலில் இருந்து)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக