அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஜாஃபர் (ரலி)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஓர் அன்
ஸாரியின் தோட்டத்தில் நுழைந்தார்கள். அங்கு ஓர் ஒட்டகம் கட்டி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒட்டகம் அண்ணலாரைப் பார்த்தவுடன் வேதனை நிரம்பிய குரலில் கனைத்தது. இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வடியலாயிற்று. அண்ணலார் அதனருகில் சென்று பரிவுடன் அதன் தலையிலும் நெற்றியிலும் திமிளிலும் தம் கரங்களால் தடவினார்கள். உடனே, அது அமைதியுற்றது. அண்ணலார்
வினவினார்கள்: ""இந்த ஒட்டகத்தின் எஜமான் யார்? இந்த ஒட்டகம் யாருடையது?'' ஓர் அன்ஸாரி இளைஞர் வந்து, ""அல்லாஹ்வின் தூதரே! இந்த ஒட்டகம் என்னுடையது'' என்று கூறினார். அண்ணலார் கூறினார்கள்:
""உம் அதிகாரத்தில் ஒப்படைத்திருக்கும் இந்த வாயில்லாப் பிராணியைக் குறித்து நீர் அல்லாஹ்வுக்கு அஞ்சவில்லையா? இந்த ஒட்டகம் தன் கண்ணீர் மற்றும் வேதனைக் குரலின் வாயிலாக என்னிடம்- நீர் அதனைப் பசியோடு வைத்திருந்து தொடர்ந்து வேலை வாங்குவதாக முறையிட்டுக் கொண்டிருந்தது'' எனக் கூறினார்கள். (ரியாலுஸ் ஸாலிஹீன்)அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
""நீங்கள் செழிப்பான காலத்தில் பயணம் செய்தால் ஒட்டகங்களுக்கு அவற்றின் உணவுப் பங்கை பூமியிலிருந்து கொடுங்கள். பஞ்சகாலத்தில் நீங்கள் பயணம் செய்வீர்களாயின் அவற்றை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள்.''(முஸ்லிம்)
விளக்கம்: பயிர்ப்பச்சைகள் பெருகிச் செழிக்கும் காலமாக இருக்கும்போது பூமியில் நாலா திசைகளிலும் புற்பூண்டுகள் முளைத்திருக்கும்போது பயணத்தில் ஒட்டகங்களுக்கு மேய்வதற்குச் சந்தர்ப்பம் கொடுங்கள். ஆனால், பஞ்சகாலமாக இருக்கும்போது வாகனங்களை வேகமாக ஓட்டிச் செல்லுங்கள். ஏனெனில், சீக்கிரம் தங்குமிடம் போய்ச் சேர்ந்திட வேண்டும். மேலும், வழியில் பசி, தாகத்தின் தொல்லையில் இருந்து அப்பிராணிகள் தப்பித்திட வேண்டும்.
அறிவிப்பாளர்:ஷத்தாத் பின் அவ்ஸ்(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
""ஒவ்வொரு செயலையும் நல்ல முறையில் சீர்படச் செய்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். எனவே, நீங்கள் எந்தப் பிராணியையாவது கொன்றால் அதனை முறையாகவும், வகையோடும் கொல்லுங்கள். எதனையாவது நீங்கள் அறுப்பீர்களாயின் அதனை நல்ல முறையில் அறுங்கள்.
உங்களில் ஒவ்வொருவரும்(ஒரு பிராணியை அறுக்கும்போது) தன் கத்தி முனையைக் கூராக்கிக் கொள்ளட்டும். அறுக்கப்படவிருக்கும் பிராணிக்கு நிம்மதியளிக்கட்டும்!(வெகுநேரம் துடிக்கவிடக்கூடாது. அதன் உயிர் சீக்கிரம் பிரியும் வண்ணம் அறுக்க வேண்டும்)
(முஸ்லிம்)
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே...நூலில் இருந்து)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக