நபிகள் நாயகம் அவர்கள் "அல்-அமீன்' என்ற பட்டத்தை மக்கா மக்களிடம் தங்கள் இளமையிலேயே பெற்றிருந்தார்கள். இந்தச் சொல்லுக்கு "நம்பிக்கைக்கு உரியவர்' என்று பொருள். அந்தக் காலத்தில் மக்காவாசிகளிடம் இப்படி ஒரு பெயரைப் பெறுவது சுலபமான காரியமல்ல. ஏனெனில், அவர்கள் யாரையும் அவ்வளவு எளிதில் நம்பி விட மாட்டார்கள். இப்படி ஒரு பட்டத்தை பெற்றதில் இருந்தே, நாயகம் அவர்கள் எந்தளவுக்கு நேர்மையாளராகத் திகழ்ந்தார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
அவர்கள் சன்மார்க்கத்தைப் பிரசாரம் செய்தபோது, அதைக் கைவிடுமாறு குரைஷிக் காபிர்கள் எவ்வளவோ சொல்லி, அவர்களை வேண்டிக் கொண்டனர். பொன்னாலும், பொருளாலும் அதிகார பீடத்தாலும் ஆசைவார்த்தை காட்டினர். ஆனால், நாயகம் அவர்கள், ""என் ஒரு கையில் சூரியனையும், மறுகையில் சந்திரனையுமே கொண்டு வந்து தருவதானாலும் என் சன்மார்க்க பிரசாரத்தை நான் கைவிடமாட்டேன்,''என்று பதிலளித்தார்கள்.அவர்களது நேர்மைக்கு இன்னொரு உதாரணமும் சொல்லலாம். பொதுவாக, போர்க்களத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் யுத்த நடவடிக்கைகளில் என்னென்ன முறைகளைப் பிரயோகம் செய்திருந்தாலும் அது சரியே என்று வாதிடுவார்கள். மற்றவர்களும் அவர்கள் கையாண்ட முறை பற்றி கவலை கொள்வதில்லை. வெற்றி பெற்றதை பாராட்டவே செய் வார்கள். ஆனால், நாயகம் அவர்கள், போர்க்களத்திலும் நேர்மையைப் பின்பற்றினார்கள். தோல்வியே கிடைக்குமென்றாலும் கூட நேர்மையை விட்டு வழுவாத பண்பாளராகத் திகழ்ந்தார்கள். மதீனா சமுதாயத்தின் ஆரம்ப நாட்களில் ஒரு சமயம் காபிர்களில் ஒரு கூட்டத்தார், நாயகம் அவர்களிடம் வந்து, மற்ற காபிர்களின் கூட்டத்தாரோடு போராடுவதில் அவர்களுக்குத் துணையாக இருப்பதாகக் கூறினார்கள். "நம் பகைவர்களின் பகைவர்கள் நம் நண்பர்கள்' என்ற கொள்கையை நாயகம் அவர்கள் ஏற்கவில்லை. அவர்களது உதவியைத் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அவர்களது உதவியை ஏற்றிருந்தால், அவர்களுக்கு மிகவும் மிகவும் உதவியாய் இருந்திருக்கும்! ஆனாலும், அதை ஏற்க மறுத்தார்கள் நாயகம் அவர்களின் நேர்மையான உள்ளம். இந்த நேர்மையாளரைப் போல, நாமும் வாழ்வில் நேர்மையைக் கடைபிடித்து வாழ வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக