islam

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185) ''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160 நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823) நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
click to create your glitter text

வியாழன், 24 மார்ச், 2011

வரலாற்று நாயகரின் வாழ்வினிலே



மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் அனுப்பப்படும் தூதுவர்களாக நபிமார்கள் விளங்கினர். இவர்களில் இருபத்து மூன்றாவதாக பூமிக்கு வந்த ஹஜ்ரத் ஈஸா (அலை) அவர்கள், கி.பி.33ம் ஆண்டு ஏப்ரல் 3ல் விண்ணகத்திற்கு உயர்த்தப்பட்டார்கள். அதன்பிறகு சுமார் 500 ஆண்டுகளாக எந்த ஒரு நபியும் பூமிக்கு வரவில்லை. இதன் காரணமாக, மக்கள் கிட்டத்தட்ட மிருகங்களாகவே மாறிவிட்டனர். அவர்களது வாழ்க்கை முறை மிகவும் மோசமாக இருந்தது. குறிப்பு, அரபு நாட்டில் வாழ்ந்தவர்களின் வாழ்க்கையைச் சொல்லவே வேண்டாம் என்ற நிலையில் இருந்தது. குடிப்பதும், பெண் குழந்தைகள் பிறந்தால் கொன்று புதைப்பதும், சமூக விரோதச் செயல்களும் ஆக்கிரமித்திருந்தது. ஒவ்வொரு சக்திக்கும் ஒவ்வொரு தெய்வம் என்ற முறையில், இன்றுள்ள காஃபாவில் 360 விக்ரகங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இத்தகைய பாவகரமான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த மக்களை சீர்திருத்த அல்லாஹ்வால் பூமிக்கு அனுப்பப்பட்ட மாமணி தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.
நாயகம்(ஸல்) அவர்கள், கி.பி.570, ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி மெக்கா நகரில் அவதரித்தார்கள். இவரது தந்தை ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாய் ஹஜ்ரத் ஆமீனா. நாயகம்(ஸல்) அவர்களின் முழுப்பெயர் "ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா அஹ்மத் முஸ்தபா ரஸுலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்பதாகும்.
நாயகம்(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னதாகவே அவரது தந்தை இறந்து விட்டார். தாயார் ஆமீனா, நாயகம் பிறந்த ஆறாம் ஆண்டில் காலமாகி விட்டார். எனவே, பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப்பின் பாதுகாப்பில் நாயகம்(ஸல்) அவர்கள் வளர்ந்து வந்தார்கள். பிறகு அவரும் காலமாகி விடவே, சிறிய தந்தை ஹஜ்ரத் அபுதாலிப் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்கள்.
அண்ணலார் அவர்கள் இளமையிலேயே செல்வாக்குடனும், நற்குணத்துடனும் திகழ்ந்தார்கள். இதன் காரணமாக மக்கள் அவர்களை "அல்அமீன்' (நம்பிக்கையாளர்) என்றும், அஸ் ஸாதிக் (உண்மையாளர்) என்றும் பாராட்டினர்.
23ம் வயதில் நாயகம்(ஸல்) அவர்கள், கதீஜா (ரலி) அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்கள். 40ம் வயதில் இவரை தனது தூதராக அல்லாஹ் அறிவித்தான். நாயகம்(ஸல்) அவர்களுக்கு 11 துணைவியார்கள் இருந்தனர். இவர்கள் மூலம் ஏழு குழந்தைகள் பிறந்தார்கள். ஆண்மக்கள் மூவரும் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார்கள்.
பெண்களில் நான்காவதாகப் பிறந்த பாத்திமா (ரலி) அம்மையார் இவருக்கு இரண்டு பேரன் மாரை பெற்றுத்தந்தார். அவர்களுக்கு ஹசன்(ரலி), ஹுசைன்(ரலி) என பெயரிடப்பட்டது. பாத்திமா அம்மையாரை "சுவர்க்கத்து பெண்களின் தலைவி' என இஸ்லாமிய மக்கள் போற்றுகின்றனர்.
நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள், இறைவனால் தூதராக அறிவிக்கப்பட்டதும், ""நமது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனே! நான் அவனுடைய தூதனாக இருக்கிறேன்,'' என்றார்கள்.
இதைக்கேட்ட மெக்காவாசிகள் அவரைத் துன்புறுத்தினர். 53 வயது வரை அவர்கள் இந்தக் கொடுமையை அனுபவித்தார்கள். இதன் காரணமாக மெக்காவில் இருந்து 450 கி.மீ., தூரத்திலுள்ள மெதீனாவுக்கு அவர்கள் குடிபெயர வேண்டியதாயிற்று. மெதீனாவில் நாயகம்(ஸல்) அவர்களை ஆதரித்த மக்களின் எண்ணிக்கை பெருகியது. இதன்பிறகு பல யுத்தங்களைச் செய்து, மெக்கா நகர மக்களையும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளச் செய்தார்கள்.
நாயகம்(ஸல்) அவர்கள் மிகுந்த பணிவுடைய வர்கள். பிறரது துன்பத்தை நீக்குவதில் அக்கறை காட்டினார்கள். அவர்கள் இவ்வுலகில் 63 வயது வரை வாழ்ந்தார்கள். கி.பி.632 ரபியுல் அவ்வல் மாதம் 12ம் தேதி இவ்வுலகைத் துறந்தார்கள். அவர்கள் பிறந்ததும், மறைந்ததும் ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இந்த நாளையே "மிலாடி நபி' என்னும் பெயரில் கொண்டாடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக